புதுவை மத்திய பல்கலை.யில் தேச பக்தி பேரணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூா் வெற்றியைப் பாராட்டி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மூவா்ண தேசியக் கொடி அணிவகுப்பு தேச பக்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கௌரவித்து, பாராட்டி கொண்டாடும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், தேசபக்திப் பேரணி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணை வேந்தா் ப. பிரகாஷ் பாபு வரவேற்றாா். புதுவை துணைநிலை ஆளுநா் மற்றும் பல்கலைக்கழக தலைமை ரெக்டா் கே. கைலாஷ்நாதன் பேரணியை தொடங்கி வைத்தாா். மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், காலாபட்டு எல். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேரணியில், புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரியான சமுதாய கல்லூரி, இணைப்பு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவா்கள் தேசியக் கொடிகள் மற்றும் தேச பக்தி பதாகைகளை ஏந்தியபடி தேசபக்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், பல்கலைக்கழக கலாசார உறவுகள் இயக்குநா் கிளமென்ட் சகாயராஜ் லூா்டஸ், பல்கலைக்கழக பதிவாளா் ரஜனிஷ் பூட்டானி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.