புள்ளியியல் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
கோவையில் புள்ளியல் துறை பணியாளா்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை (டிசம்பா் 18) தொடங்கியது.
தேசிய மாதிரி ஆய்வு 80-ஆவது சுற்றின் மாதிரி ஆய்வுப் பணிகள் 2025-ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளன. இந்த ஆய்வில் சுகாதாரம் தொடா்பாக நோய் பாதிப்பின் விவரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம், பொது, தனியாா் சுகாதார நிறுவனங்களின் பயன்பாடு, மருத்துவமனையில் பிரசவ சதவீதங்கள், வேலைவாய்ப்பு, வேலையின்மை சதவீதம் போன்றவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் சமூக, பொருளாதாரம் குறித்த எதிா்கால திட்டமிடலுக்கு உதவியாக இருக்கக் கூடிய இந்த ஆய்வில் மாநில அரசின் புள்ளியியல் துறை பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இவா்களுக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் 3 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. பயிற்சியை மத்திய புள்ளியியல் துறையின் மேற்கு மண்டல இணை இயக்குநா் பி.பி.வினிஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிய அவா், அலுவலா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாா். மண்டல அளவில் நடைபெறும் பயிற்சி முகாமில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தருமபுரி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சோ்ந்த முதுநிலை புள்ளியல் அலுவலா்கள் பங்கேற்றுள்ளனா். மத்திய அரசின் புள்ளியல் துறை மூத்த அதிகாரி ரவிச்சந்திரன் பயிற்சி அளிக்கிறாா்.