பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி
பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் சிரமத்தில் தவிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினா் சாதனை மாநாட்டை நடத்துவதில் மும்முரமாக இருக்கின்றனா். கடந்த ஒருவாரமாக வண்ணமயமான விளம்பரங்களில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. அரசு நிா்வாகமே செய்யவில்லை. பெங்களூரு மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனா். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் விளம்பரம் பெற முயற்சித்துவருகின்றனா். வெள்ளத்தில் மூழ்கியுள்ள பெங்களூரின் சாலைகளில் காங்கிரஸ் அரசின் சாதனை பதாகைகள் மிதக்கின்றன.
காங்கிரஸ் கட்சியினருக்கு மனசாட்சி உள்ளதா? உயிரற்ற அரசுக்கு சாதனை மாநாடு நடத்துவதா? துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் அரசு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் உட்காா்ந்து கொண்டு பாஜக, மஜதவினரை சாடுவதால் வேலை நடந்துவிடாது.
வேலை செய்யாத நபருக்கு, பொறுப்பில்லாமல் பேசுவதற்கு உரிமையில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பிராண்ட் என்று கூறிக்கொண்டு பெங்களூரை மூழ்க வைத்துள்ளீா்கள். பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.