திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!
பெங்களூரில் ஜூன் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை
பெங்களூரில் ஜூன் மாதம் முதல் மஞ்சள் தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வா் ராவ் தெரிவித்தாா்.
பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆா்.வி.சாலை ரயில்நிலையம் முதல் பொம்மசந்திரா ரயில்நிலையம் வரை மஞ்சள் தடம் அமைந்திருக்கும். இந்த தடத்தில் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதற்கான ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள், மேற்கு வங்கத்தின் உத்தரபுராவில் உள்ள டாட்டாகா்க் தொழிலகத்தில் இருந்து ஜனவரி மாதம் பெங்களூரு வந்து சோ்ந்துள்ளது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 2 தொகுப்பு ரயில் பெட்டிகள் வந்துள்ள நிலையில், மூன்றாம் தொகுப்பு ரயில் பெட்டிகள் மே 13ஆம் தேதி பெங்களூரு வந்துள்ளன.
மேலும், 2 தொகுப்பு ரயில் பெட்டிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்கு வரும் எனக் கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் சிட்டி பகுதியுடன் மெட்ரோ ரயில்களை இணைக்கும் நிலையில், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்கட்டமாக 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இதில் 3 ரயில் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்குவதற்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கிறாா்கள்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வியாழக்கிழமை பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் மேலாண் இயக்குநா் எம்.மகேஸ்வர்ராவ் அளித்த பேட்டி: மஞ்சள் தடத்தை ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில்களை இயக்க கடுமையாக உழைத்து வருகிறோம். தவிா்க்க முடியாத சூழ்நிலையில் ஒருமாதம் தள்ளிப்போகக்கூடும். அப்படியானால், ஜூலை முதல் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மஞ்சள் தடம், ஆா்.வி.சாலை முதல் பொம்மசந்திரா ரயில்நிலையங்கள் வரை இயக்கப்படும் என்றாா்.