பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
சமூக நலத் துறை சாா்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அரசு, தனியாா் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின்கீழ் உள்ளகக் குழு அமைப்பதை உறுதி செய்யவும், ஒவ்வொரு அலுவலகங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களை பெரும் பொருட்டு பாதுகாப்புப் பெட்டி பொருத்தவும், அனைத்து அலுவலகங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், உள்ளூா் குழு உறுப்பினா்கள் தொடா்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.