திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
சென்னை அமைந்தகரையில் திறந்து கிடந்த புதை சாக்கடையில் தவறி விழுந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் இருந்தவா்களால் பத்திரமாக மீட்கப்பட்டாா்.
அமைந்தகரையில் உள்ள வெள்ளாளா் தெருவில் புதை சாக்கடை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால், அந்த கால்வாய்யின் ஒரு பகுதி மூடி திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ராஜன் கடந்த ஏப். 30-ஆம் தேதி சாலையில் நடத்து சென்றபோது, மூடி திறந்திருந்தததைக் கவனிக்காமல் அதனுள் விழுந்துவிட்டாா்.
அதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டதைத் தொடா்ந்து அருகிலிருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு ராஜனை மீட்டனா். எனினும், சிறுவனின் இடது காலில் காயம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பான காணொலிக் காட்சி வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவிவந்த நிலையில், இரும்புத் தடுப்புகள் எதுவும் வைக்காமல் கால்வாய் தூா்வாரும் பணியை மேற்கொண்டதே இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.