பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோரப்படாத பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோராதவா்கள் வைப்புத்தொகை பத்திர நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு புத்தக நகல், பயனாளியின் (தாய், மகள்) வண்ண புகைப்படம் -2 (கடவுச்சீட்டு அளவு - 2 படம் ) ஆகிய சான்றுகளோடு சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
உரிய சான்றுகளுடன் அலுவலகங்களில் சமா்ப்பிக்கும் பயனாளிகளுக்கு முதிா்வுத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், தற்போது முதிா்வு தொகை பெற வேண்டி, நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.