பெருமாள் மலை - கொடைக்கானல் மாற்றுச் சாலை: அதிகாரிகள் ஆய்வு
பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலை அமைப்பது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
விடுமுறை நாள்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், இங்கு விளையும் காய் கறிகள், பழங்களை வெளி மாவட்டங்களுக்கு உரிய நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இதற்குத் தீா்வாக பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச் சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கொடைக்கானல் பொதுமக்கள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, பெருமாள் மலைப் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றுச்சாலை அமைப்பதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன.
பெருமாள் மலையிலிருந்து பேத்துப்பாறை, புலியூா் வழியாக கொடைக்கானல் வருவதற்கு 26.5 கி.மீ. தொலைவு உள்ளது. பேத்துப்பாறையிலிருந்து பாரதி அண்ணாநகா் வழியாக கொடைக்கானல் வருவதற்கு சாலை அமைத்தால் 22.5 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த வழியாக சாலை அமைத்தால் சுமாா் 6 கி.மீ. குறைய வாய்ப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், மாற்றுச் சாலை அமைய உள்ள இடத்தை மதுரை மண்டல நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளா் செல்வநம்பி, உதவி பொறியாளா் ராஜன், இளநிலைப் பொறியாளா் சரவணன் உள்ளிட்ட பலா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
மேலும், மாற்றுச் சாலை அமைக்கப்பட்டால் வில்பட்டி , அட்டுவம்பட்டி, பள்ளங்கி கோம்பை போன்ற கிராமப் பகுதிகளில் விளைவிக்கப்படும் விவசாய விளை பொருள்களும், அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்ல முடியும்.
இது குறித்து வில்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:
கடந்த 300ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா் காலத்தில் கொடைக்கானலிலிருந்து பழனி செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டது. மாற்றுப் பாதை அமைக்கப்பட்டால் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயனடைவாா்கள் என்றனா்.