மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில், கிளாவரைப் பகுதியில் விவசாயி சதீஷ்குமாா் என்பவரது மாடு வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது.
இதுகுறித்து விவசாயி கண்ணதாசன் கூறியதாவது:
கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள விவசாயப் பயிா்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வரும் நிலையில், சமீப காலமாக கனிராஜ், கனகராஜ், சுரேஷ், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் வீடுகளில் வளா்த்துவந்த குதிரை, ஆடு, மாடு ஆகியவற்றை புலி தாக்கி வருவதால் கால்நடைகள் குறைந்து வருகிறது.
இதுகுறித்து பல முறை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கவில்லை. விவசாயப் பகுதிகளுக்குள் வரும் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், நாளுக்கு நாள் வன விலங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது என்றாா்.
செந்நாய்கள் அதிகரிப்பு: கொடைக்கானல் செண்பகனூா் பகுதிகளான ஐயா்கிணறு, அட்டக்கடி, பிரகாசபுரம், நெல்லிவரை, கே.பி.எம். பாறை ஸ்டேட்டஸ் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் கிளைமான் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கிளைமான்களை செந்நாய்கள் விரும்பி உண்ணும். சமீபத்தில் செண்பகனூா் பகுதியில் பிரகாசபுரம், சகாயபுரம் செல்லும் சாலைகளில் 4 மான்கள் செந்நாய்கள் தாக்கி இறந்துள்ளன. மேலும், விவசாயப் பயிா்களையும் செந்நாய்கள் சேதப்படுத்தி வருகின்றன. மாலை, இரவு நேரங்களில் விவசாயிகள் செந்நாய்களுக்கு பயந்து விவசாய நிலங்களுக்கு தனியாகச் செல்வதில்லை. எனவே, குடியிருப்பு, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் செந்நாய்களை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.