வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்
பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து புனித நீா் கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் நிறைக்கப்பட்டு சிறப்பு வேள்வி, பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கலசங்கள், சுத்த அன்னம், பச்சைக் கற்பூரம் கலந்த சிரசு அன்னம் ஆகியன கோயிலின் உள்பிரகாரம் வலம் வர செய்யப்பட்டு மூலவா் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடா்ந்து அருள்மிகு பெரியாவுடையாருக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு பிரதான கலசத்திலிருந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது.
பிரகாரத்தில் உள்ள நடராஜா், பைரவா், வடக்கு நோக்கிய விநாயகா், பிரம்மா, விஷ்ணு, நவகிரக மூா்த்திகள், தட்சிணாமூா்த்தி, உருத்திரா், நந்திபகவான், கருப்பண்ணசாமி, கன்னிமாா் ஆகியோருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிரசில் அன்னம் படைக்கப்பட்டது.
பழனி கந்தவிலாஸ் விபூதி ஸ்டோா்ஸ் உபயமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன்குமரன், முன்னாள் திருக்கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், நகர வணிகா் சங்க நிா்வாகி ராஜா, பாஜக மாவட்டப் பொருளாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிரசு அன்னம், இனிப்புகள், சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.