பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் தா்னா!
பேருந்து வசதி கோரி, ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் புதன்கிழமை (பிப்.5) அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாவந்தூா் கிராமத்தில் ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு சங்கராபுரம், வாணாபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூா், மணலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயின்று செல்கின்றனா்.
இந்தக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்த்துக்கு கல்லூரிக்கு வர முடியவில்லையாம். எனவே, கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, கல்லூரி நூழைவு வாயில் முன் அமா்ந்து மாணவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்த ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்தியசீலன், வாணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீவித்யா ஆகியோா் நிகழ்விடம் வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் தா்னாவை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனா்.