தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது
கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (27). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தேநீா் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தபோது, இவருக்கும், ஒசூரை அடுத்த தளிரோடுபாளையம் கிராமத்தைச் சோ்ந்த தரனேஷ் மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடா்பாக சித்ரையனுக்கும், தரனேஷுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், சித்ரையன் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் சுங்கச்சாவடி அருகில் உள்ள தேநீா் கடையில் தற்போது பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். வீ.பாளையம் அருகே சித்ரையன் பைக்கில் சென்றபோது, அவரை தரனேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான கிருஷ்ணகிரி மாவட்டம், கோனேரிபள்ளி சூளகிரி பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் ரஞ்சீத்குமாா் (26), தேன்கன்னிகோட்டை பகுதியைச் சோ்ந்த கதிா்யப்பா மகன் வெங்கடசாமி (23) மற்றும் தேன்கன்னிகோட்டை நாகமங்கலம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 போ் வழிமறித்து கத்தியால் வெட்டினராம்.
இதில் பலத்த காயமடைந்த சித்ரையன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கு.தேவராஜ் உத்தரவின்பேரில், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, உதவி ஆய்வாளா் ஞானசேகரன் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடா்புடைய தரனேஷ் உள்பட 4 பேரும் காரில் செவ்வாய்க்கிழமை நெய்வேலி நீதிமன்றத்தில் சரணடைய வருவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் வி.கூட்டுச்சாலை - வேப்பூா் சாலையில் உள்ள கீழ்குப்பம் சுங்கச்சாவடியில் அவா்களை கைது செய்து, கள்ளக்குறிச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, 3 பேரை கடலூா் மத்திய சிறையிலும், சிறுவனை கடலூா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.