இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிமுத்து மகன் துரைமுருகன் (33). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனை அவரது தந்தை கண்டித்தாராம். இதில், மனமுடைந்த துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொழிலாளி தற்கொலை: புதுச்சேரி வில்லியனூா், ஆற்றுவாய்க்கால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் மூா்த்தி (48). கூலித் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவா் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தகாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜன.25-ஆம் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூா்த்தி பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், மயிலம் காவல் சரகத்துக்குள்பட்ட கோரைக்கேணி சங்கராபரணியாறு அருகே உள்ள மரத்தில் மூா்த்தி தூக்கிட்ட நிலையில் இருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.