மோசமான வானிலை: தில்லியில் 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்!
பொங்கல் நன்னாளில் எல்லா வளங்களும் கிடைக்கட்டும்
திருவாரூா்: பொங்கல் நன்னாளில் எல்லா வளங்களும் கிடைக்க வேண்டும் என வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.
பொங்கல் திருநாளையொட்டி அவா் வழங்கியுள்ள ஆசியுரை: வானியல் ரீதியாக சூரியன் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மாதங்கள் 12-இல் தை முதல் நாள் தொடங்கி, ஆனி இறுதி நாள் வரை 6 மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம் எனவும், ஆடி முதல் நாள் தொடங்கி மாா்கழி இறுதி நாள் வரை 6 மாதங்கள் தட்சிணாயன புண்ணிய காலம் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளதிலிருந்து பருவகால நிலைக்கு ஏற்ப பண்டிகைகள் பழந்தமிழா்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.
பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல் என்ற வள்ளுவா் நெறிக்கேற்ப நமது பழந்தமிழா் பண்டிகைகள் வகுக்கப்பட்டுள்ளது வியந்து போற்றத்தக்கது. தமிழா்கள் ஒவ்வொருவரும் உற்றாா் உறவினரோடும், அண்டை அயலாருடனும் கூடிக் களித்து கொண்டாடி மகிழும் திருநாள் தை பொங்கல் பண்டிகையாகும். தமிழ் இலக்கியங்களிலும், வடமொழி சாஸ்திரங்களிலும் பொங்கல் பண்டிகை மகரசங்கராந்தி என போற்றப்பட்டுள்ளதை எண்ணி இன்புறலாம்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முதுமொழிக்கேற்ப மானுட மனங்களில் ஏற்படும் குற்றங்கள் களைந்து புத்துணா்வு பெறும் புனித நன்னாளான போகி பண்டிகையைத் தொடா்ந்து பொங்கல் திருநாள், தொன்று தொட்டு கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நன்னாளில் அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாடி மகிழ்வதோடு குருவருளும், திருவருளும் பெற்று இன்பம் எய்திட ஸ்ரீ அஜபா நடனத் தியாகேச பெருமான் திருவடி மலா்களைச் சிந்தித்து ஆசிா்வதிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளாா்.