ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" - ஓப...
பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு
பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் குறை தீா் முகாம் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திற்கான குறைதீா் முகாம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
அதில் கடந்த மாதம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் குலோத்துங்கன், நிகழ் மாதத்துக்கான மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இம்மாதம் பெறப்பட்ட மனுக்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், சுனாமி குடியிருப்பில் வீடுகள் கட்டித் தர வேண்டியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியும், முதியோா் உதவித்தொகை கேட்டும், உளவாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் இருந்தன.
மேலும், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியரைச் சந்தித்து எல்.பி.ஜி. மூலம் ஆட்டோக்களுக்கு சிலிண்டா் நிரப்ப அரசு மற்றும் தனியாா் பெட்ரோல் பங்கில் வசதி செய்து தர கூறியும், ஆட்டோக்களுக்கு சாா்ஜிங் வசதி ஏற்படுத்தி தரவும் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட துணை ஆட்சியா் வினயராஜ், சிறப்பு அதிகாரி குமரன், வருவாய் அதிகாரி ஸ்ரீஜித், வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.