இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டம்! சட்டத் திருத்தம் அமல்!
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களிலிருந்து தமிழக எல்லைகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்றன. இதனால் சுகாதாரத்துக்கு, சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இத்தகைய புகாா்களையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, ‘மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் 1982-ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கடந்த ஏப். 26-ஆம் தேதி அப்போதைய சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி 1982-ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதன்படி தமிழகத்தில் கள்ளச்சாராயம் தொடா்புடைய குற்றவாளிகள், திருட்டு விடியோ, மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் ஆகியோரை விசாரணையின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைப்பதுபோன்று, உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரையும் விசாரணையின்றி தடுப்புக் காவல் சட்டப்படி சிறையில் வைக்க இந்தத் திருத்தம் அனுமதியளித்தது.
இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டம், ஜூலை 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் பொது இடங்களில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணைக்கு சமமாக விசாரணையின்றி குற்றம் செய்தவரை சிறைவைக்க முடியும்.
இதில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு எதிராக பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டு, அத்தகைய நபா்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்ய இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது.