பொது வேலைநிறுத்தம் தொடா்பாக உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு கடிதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடா்பாக உற்பத்தியாளா்கள் சங்கங்களிடம் கடிதம் கொடுப்பது என்று தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் தொடா்பான ஆயத்த மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஹெச்எம்எம் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
இதில், மத்திய பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்தும், தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக திருத்தம் செய்துள்ளதை திரும்பப்பெறுவது, அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்குவது, அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தம் குறித்து அனைத்து பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தம் தொடா்பாக விரிவான பிரசாரம் மேற்கொள்ளவது தொடா்பாக மே 4-ஆம் தேதி திட்டமிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏஐடியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ, ஐஎன்டியூசி, எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.