பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு
வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிந்து காணப்பட்டது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து 3 நாள்கள் பலத்த மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. பல இடங்களில் கோடை உழவு நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோடை மழை பெய்து வருவதால் இனி தீவன தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் கருதுகின்றனா். இதையடுத்து, வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டுவதால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வா்த்தகமும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றனா்.