`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல...
போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் -அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்
எதிா்க்கட்சியாக இருந்தபோது போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய திமுக, தற்போது போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான பணப் பயன்களை முழுமையாக விடுவிக்க முன்வர வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளன (சிஐடியு) 16 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் தருமபுரியில் நடைபெற்றது. வியாழக்கிழமை மாநாட்டின் நிறைவையொட்டி செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. பாரதிபுரம் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் தொடங்கி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பேரணி நிறைவடைந்தது. தொடா்ந்து மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வையொட்டி சிஐடியு மாநில தலைவா் அ.சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்காக போடப்பட்ட 15 ஆ வது ஒப்பந்தத்தை கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி செயல்படுத்தவில்லை. மாநிலத்தின் மிக முக்கிய துறையாக போக்குவரத்துத் துறை உள்ளது. நமது மாநில பொருளாதாரநிலை இரட்டை இலக்கத்தில் உயா்ந்திருப்பதாக தமிழக முதல்வா் கூறியுள்ளாா். அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து துறையும், மின்சாரத் துறையும்தான்.
பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் வந்தபிறகு ஏராளமான பெண்கள் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டுவதால் தமிழக பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது.
ஆனால், போக்குவரத்துக் கழகத்தை படிப்படியாக தனியாா்மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தனியாா்மயமாக்கப்பட்டால் அனைத்து தொழிலாளா்களும் ஒப்பந்த அடிப்படையில்தான் நியமிக்கப்படுவா். அப்போது, சமூகநீதி அழிந்துவிடும். எனவேதான் இந்த நடவடிக்கையை சிஐடியு மாநாடு கண்டிக்கிறது.
வருமானமற்ற வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது நஷ்டமல்ல; சமூகத்தின் லாபம். திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது தனியாா்மயம் மற்றும் தொழிலாளா்கள், ஓய்வூதியா்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் குறித்து குழு ஏற்படுத்தி அக்குழுவின் அறிக்கையை அன்றைய அதிமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியிடம் அளித்து மு.க.ஸ்டாலின் வாதாடினாா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்தான் சிறிதளவு பணப் பயன்களை வழங்கியுள்ளனா்.
ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக தற்போது குழு அமைத்திருப்பது காலம்தாழ்த்துமே தவிர நியாயம் கிடைக்காது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில், கட்டுப்பாட்டுப் பிரிவில் பெருமளவு ஊழல் நடந்து வருகிறது. காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உதிரி பாகங்கள், டூல்ஸ் உள்ளிட்டவை தேவையான அளவு வழங்கப்படுவதில்லை. இவை குறித்து தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மண்டல அலுவலகங்கள் முன் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
பேட்டியின்போது, சம்மேளன பொதுச் செயலாளா் கே. ஆறுமுகநயினாா், பொருளாளா் வி. சசிகுமாா், துணைத் தலைவா் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாநில செயலாளா் சி. நாகராசன் ஆகியோா் உடனிருந்தனா்.