போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தருமபுரி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், மாதேஷுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டாா்.