மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவாரூா்: போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.
சென்னையில், ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு விழா துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியது:
மாணவப் பருவத்திலேயே போதைப் பழக்கத்தின் தீய விளைவுகளை முழுமையாக அறிந்துகொண்டு, போதைப் பழகத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.
திரையரங்குகளில் படம் திரையிடும் முன், போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்ட நபா்களின் சிறு விழிப்புணா்வு குறும்படம் திரையிடுவா். அது உங்கள் வாழ்வின் கடைசி வரை நினைவில் இருக்க வேண்டிய குறும்படம்.
குடும்பத்தினா், நண்பா்களுடன் இணைந்து போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும் என்றாா்.
தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் போதைப் பொருள்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரியில் செயல்படும் எதிா்ப்பு மன்றங்கள், தன்னாா்வக் குழுக்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, திருவாரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு குறும்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில், திருவாரூா் கோட்டாட்சியா் சௌமியா, முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) சௌந்தரராஜன், உதவி ஆணையா் ரவிச்சந்திரன், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்லூரி தாளாளா் சீனிவாசன், கல்லூரி முதல்வா் ஹேமா, குடவாசல் வட்டாட்சியா் இளங்கோவன் உள்பட பலா் பங்கேற்றனா்.