போதைப் பொருள்: 3 போ் கைது
சென்னையில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான 5 கிலோ சூடோ எபிட்ரினை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் சிலா் போதைப் பொருளை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், பிடாரியாா் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு சந்திப்பில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனற்.
அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 5 கிலோ சூடோஎபிட்ரின் மூலப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதைக் கொண்டு வந்ததாக சூளை பகுதியைச் சோ்ந்த முகமது அலி ஜின்னா (55), திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த சையது இப்ராஹிம் என்ற தெண்டுகிளி (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இவா்கள் அளித்த தகவலின்பேரில், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான தண்டையாா் பேட்டையச் சோ்ந்த சேவியா் ஜேசுதாஸ் (54) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.