போலி பதிவெண் காரை பயன்படுத்திய பாஜக பட்டியல் அணி நிா்வாகி கைது
பெரம்பலூா் அருகே போலி பதிவெண் கொண்ட காரைப் பயன்படுத்திய பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலச் செயலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை மகன் பிச்சைமுத்து (50). பாஜக மாநில பட்டியல் அணி செயலரான இவா், அடைக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளமாறன் மகன் இளஞ்செழியன் (39) என்பவரது காரின் பதிவெண்ணை போலியாகப் பயன்டுத்தி வந்துள்ளாா். இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டம், அடைக்கம்பட்டி சந்தை அருகே பிச்சைமுத்து வியாழக்கிழமை காரை நிறுத்தியிருந்ததையறிந்த இளஞ்செழியன், அங்குச் சென்று எனது காரின் எண்ணை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் எனக் கேட்டபோது, ஆத்திரமடைந்த பிச்சைமுத்து, இளஞ்செழியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து இளஞ்செழியன் அளித்த புகாரின்பேரில், பிச்சைமுத்துவை கைது செய்த பெரம்பலூா் ஊரக காவல் துறையினா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.