ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!
'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?
பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்வேறு பெயர்களில் பணம் சம்பாதிக்க ஆசையைத் தூண்டி மோசடி செய்து ஏமாற்றுகிறார்கள்.
இதனை நம்பி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழப்பது தொடர்கிறது. இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த ஜூன் 26-ம் தேதி அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

அதனை நம்பி அதில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்துள்ளார். பின்னர், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் அவரைத் தொடர்பு கொண்ட மோசடிக் கும்பல், ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளது. இதனை நம்பிய அந்த நபர், அந்தக் கும்பல் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்கிற்கு ரூ.17,16,985 அனுப்பியுள்ளார்.
10 நாட்களுக்கு மேல் ஆகியும் முதலீடு செய்த பணத்தின் மீதான வட்டித் தொகை எதுவும் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அதே மோசடிக் கும்பல் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு, மேலும் ரூ.5 லட்சம் பணம் செலுத்தினால் பெரிய லாபத்துடன் முதலீடு செய்த பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். பணம் கிடைத்தால் போதும் என நம்பிய அவர், மீண்டும் ரூ.5 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் மொத்தம் ரூ. 22,16,985 பணத்தை இழந்துள்ளார். இரண்டாவதாக முதலீடு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் முதலீடு செய்த பணம் குறித்தும், வட்டித் தொகை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த நபர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமானியின் உத்தரவின் பேரில், சைபர் பிரிவு ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து சைபர் பிரிவு போலீஸாரிடம் பேசினோம். “பொதுவாக சைபர் கிரைம் கொள்ளையர்கள் போலி வங்கிக் கணக்கு, போலி மொபைல் எண் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபடுவார்கள். இதனால் போலீஸாரின் பிடியில் எளிதில் சிக்காமலிருந்து வந்துள்ளனர்.
இருப்பினும் துரிதமாக வங்கிக்கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். மோசடியில் சிக்கிய நெல்லையைச் சேர்ந்த நபரின் பணம், கேரள மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த வங்கிக்கணக்கில் இருந்த பணம் காசோலைகள் மூலம் பெறப்பட்டுள்ளது.

காசோலை மூலம் சைபர் கொள்ளையர்கள் பெறப்பட்ட வங்கிக்கணக்கின் உரிமையாளரின் விவரங்களைப் பெற்றோம். கேரள மாநிலம் மலப்புரத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், அங்குள்ள நகைக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஜிதின், சுவிஸ்குமார் ஆகியோரைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தோம்.
விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த நபரிடம் ரூ.22 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் சவுதி அரேபியாவிற்குச் சென்று நகைகள் வாங்கச் சென்று வந்தபோது பல சைபர் கொள்ளையர்களின் தொடர்பு கிடைத்ததால் சைபர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் நெல்லையில் நடக்கும் சவுதி அரேபிய சைபர் கொள்ளையர்களுக்குத் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது. இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரே வாரத்தில் இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் சிக்கி 3 பேர், ரூ.26.50 லட்சம் பணத்தை இழந்துள்ளனர்.
நெல்லை மாநகரில் இந்த ஆண்டில் இதுவரை ஆன்லைன் மோசடி தொடர்பாக 507 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், நெல்லையைச் சேர்ந்தவர்கள் ரூ.5.41 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.92.91 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில், ரூ.75,84,339 மதிப்பிலான தொகையை மோசடி நபர்கள் பயன்படுத்த முடியாத வகையில் சைபர் போலீஸார் ’பிரீஸ்’ செய்துள்ளனர். அதே போல 339 வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.” என்றவர்கள், சைபர் கிரைமில் இருந்து தப்பிப்பது பற்றியும் கூறினார்கள்.

“இது போன்ற மோசடிக் கும்பல்கள் அனைத்தும் முதலில் சிறிய லாபம் கொடுத்த நம்பிக்கை, பின்னர் டெலிகிராம், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மூளைச்சலவைகள் செய்து பெரிய தொகையை முதலீடு செய்யத் தூண்டுவது, முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டால் வரி, கமிஷன் எனக்கூறி மேலும் பணம் பறிப்பது எனப் பல தந்திரங்களைக் கையாளுவார்கள்.
இது போன்றவற்றை நம்ப வேண்டாம். அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லின்குகளை கிளிக் செய்வதையும், செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஏதேனும் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால், தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்” என்றனர்.