பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
``போலீஸ் சிரிக்கிறாங்க... தெய்வச்செயல் மேல நடவடிக்கை எடுக்கணும்’’ - ஆளுநர் மாளிகை முன்பு அழுத மாணவி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி அளித்த வன்கொடுமை விவகாரத்தை நேற்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். மேலும், இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 நாள்களுக்குள் எஃப்.ஐ.ஆர் நகலுடன் விரிவான அறிக்கையை சமர்பிக்கவும் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் அனுப்பியிருக்கிறது ஆணையம். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வச்செயல் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால் தெய்வச்செயலுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி தனக்கு நீதி கேட்டும், தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நடந்துகொள்ளும் விதமும், விசாரணை நடத்தும் முறையும் சரியில்லை எனக் குற்றம்சாட்டி இன்றைய தினம் ஆளுநரிடம் புகாரளிப்பதற்காக சென்னை வந்தார். ஆனால், முன்கூட்டியே ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதி நேரம் கேட்கப்படாத காரணத்தினால், ராஜ்பவனுக்குள் செல்ல மாணவிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஆளுநர் மாளிகைக்கு வெளியே காத்திருந்தபோது, திடீரென அங்குவந்த பெண் போலீஸார் மாணவியையும், அவருடன் வந்த தாயையும் விசாரணைக்கு அழைத்துசெல்வதாகக் கூறி ஆட்டோவில் வலுகட்டாயமாக ஏற்றிச்சென்றனர். பெண் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த மாணவியும், அவரின் தாயும் ``எங்கள் அனுமதி இல்லாமல் எங்கு அழைத்து செல்கிறீர்கள். ஆளுநரிடம்தான் புகாரளிக்க வந்தோம். உங்களிடம் கிடையாது. ஆட்டோவை நிறுத்தவில்லை என்றால் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துவிடுவோம்’’ என கத்தி கூச்சலிட்டனர்.

பத்திரிகை, ஊடகவியலாளர்கள் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று அந்தக் காட்சிகளை பதிவு செய்ததால், திகைத்துபோன போலீஸார் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியையும், தாயையும் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து, இருவரும் வேறு ஆட்டோ பிடித்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். இதுகுறித்து பேசிய மாணவி, ``போலீஸ்காரங்க எங்க கூட்டிக்கிட்டுப் போறேன்னே சொல்லல. வலுகட்டாயமாக ஏத்திக்கிட்டுப் போறாங்க. நக்கலாக சிரிக்கிறாங்க...’’ என்றார் கண்ணீரோடு.