ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!
மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை
எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உள்ள பாரம்பரிய பொருள்களை ஏலம் விடுவதற்கான போன்ஹாம்ஸ் இல்லம் மூலம் இணைய வழியில் ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.57 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா மற்றும் ஆய்வுகள் பிரிவில் ரூ1.7 கோடிக்கு விற்பனையானது.
1931-இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க லண்டனுக்கு மகாத்மா காந்தி சென்றபோது அவருக்கு புகழ்பெற்ற ஓவியரான கிளோ் லெய்டன் அறிமுகப்படுத்தப்பட்டாா். அவரே இந்த உருவப்படத்தின் ஓவியராவாா்.
இதுகுறித்து போன்ஹாம்ஸ் விற்பனையகத்தின் தலைமை அதிகாரி ரியொனன் டெமிரி கூறுகையில், ‘எண்ணெய் வண்ணங்களால் (ஆயில் பெயிண்டிங்) வரையப்பட்ட மகாத்மா காந்தியின் ஒரேயொரு வரைபடமாக இது கருதப்படுகிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஓவியம் முன்பு ஏலத்தில் விடப்படவில்லை.
ஓவியா் கிளோ் லெய்டனால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் இந்த உருவப்படம் உலகளவில் பல்வேறு தரப்பு மக்களை அவா் சந்தித்து ஆதரவளித்ததை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக உள்ளது. இதனால் உலகளவில் இந்த உருவப்படம் மிகவும் பிரபலமடைந்துள்ளது’ என்றாா்.
ஓவியா் கிளோ் லெய்டன் 1989-இல் காலமானாா். அதன்பிறகு அவரிடமிருந்த இந்த உருவப்படம் போன்ஹாம்ஸுக்கு வழங்கப்பட்டது.