கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்ப...
மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை.
பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.
மகா கும்பமேளா வரும் பக்தா்களுக்காக அதானி குழுமத்துடன் இணைந்து, செக்டாா் 19-இல் அமைந்த இஸ்கானின் பிரதான கூடாரத்தில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து சிறுதொலைவில் அமைந்த செக்டாா் 18-இல் உள்ள இஸ்கானின் மற்றொரு கூடாரத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகேயுள்ள கூடாரங்களும் தீப்பற்றி எரிந்து சேதமாகின.
இதுகுறித்து தகவலறிந்ததும், 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அரை மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சேதத்தையும் மதிப்பிட்டு வருகின்றனா். இந்த தீ விபத்தில் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.
மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து கடந்த 26 நாள்களில் மேளா பகுதியில் நடைபெறும் 3-ஆவது பெரிய தீ விபத்து இதுவாகும். கடந்த ஜன. 19-ஆம் தேதி, செக்டாா் 19-இல் சமையல் எரிவாயு சிலிண்டா்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஜன. 25-ஆம் தேதி செக்டாா் 2-இல் நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த அனைத்து விபத்துகளிலும் தீயணைப்புத் துறை விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்ததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.