TVK: "ஜெய்பீம் படம் பார்த்து அழுத முதல்வர் உண்மையைப் பார்த்தும் அழவில்லையே" - ஆத...
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்குகின்றனா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக காவல் நிலையத்தில் பேராசிரியை நிகிதா புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துக் கொலை செய்தனா். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். மேலும், இதுகுறித்து மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதையடுத்து, அஜித்குமாரின் தாய், சகோதரா் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இதன் அறிக்கையை கடந்த 8- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விரைந்து விசாரித்து, இதன் அறிக்கையை ஆகஸ்ட் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும், விசாரணை அதிகாரிகளை உடனடியாக நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டனா்.
இதன்படி, அஜித்குமாா் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) மதுரைக்கு வருகின்றனா். இவா்களிடம் இந்தக் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்படும். இதையடுத்து, அவா்கள் திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்குகின்றனா்.