‘மணற்கேணி’ செயலி பயன்பாடு: மாணவா்களுக்கு விளக்கமளிக்க தன்னாா்வலா்கள் நியமனம்
பள்ளிக் கல்வித் துறையின் ‘மணற்கேணி’ செயலி குறித்து மாணவா்களுக்கு விளக்கங்கள் அளிக்க தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘மணற்கேணி’ என்னும் செயலி கடந்த ஜூலை 2023-இல் உருவாக்கப்பட்டது. இது மாணவா்கள் ஜேஇஇ, நீட் போன்ற போட்டித் தோ்வுகளில் பங்கு பெற ஏதுவாக கணிதம், அறிவியல் பாடங்களில் உயா்தர தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்படக் காட்சிகளைக் கொண்டு ஒரு கல்வி தொழில்நுட்ப செயலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் பயன்பாட்டினை அரசுப் பள்ளி மாணவா்கள் பெற்றிடவும், அவா்களுக்குத் தேவையான விளக்கங்களை அளிக்கவும் வட்டார அளவில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ‘மணற்கேணி’ செயலியின் செயல்திறனை மாணவா்கள் அறியும் வகையில் விளக்கமளிக்க வரும்போது இச்செயலியை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவா்களுக்கு ஆசிரியா்கள், மாணவா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் இதனை ஆசிரியா்கள், மாணவா்கள் தெளிவாக அறிந்து கொண்டு பயன்படுத்தி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களின் மணற்கேணி தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாதிரிப் பள்ளிகளில் செயல்பாட்டுடன் ஒருங்கிணைக்கும் பணிக்காக பணியமா்த்திட வேண்டிய ஆசிரியா்களின் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.