`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்திருக்கும் படங்கள்
கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் 'மதகஜராஜா'.
சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமலிருந்த இப்படம் ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 'மதகஜராஜா' படம் எப்படி பல வருடங்கள் கிடப்பில் இருந்ததோ அதேபோல மொத்த படப்பிடிப்பும் முடிந்து டீசர், டிரெய்லர்கள் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவித்தும் பல வருடங்கள் கடந்தும் இன்னமும் ரிலீஸ் ஆகாத தமிழ் படங்கள் பல இருகின்றன. அந்தப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
துருவ நட்சத்திரம்
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் வெளியாகமல் இருக்கிறது. கடந்த வருடம் இப்படம் வெளியாகும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பும் வந்தது. ஆனால் அப்போதும் வெளியாகவில்லை.
நரகாசூரன்
2018 ஆம் ஆண்டு கௌதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் இப்படம் வெளியாகமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 2020-ல் நிச்சயம் வெளியாகிவிடும் எனப் படக்குழு அறிவிப்பு செய்தார்கள். ஆனால் வெளியாகவில்லை.
சதுரங்க வேட்டை 2
கடந்த 2014 ஆம் ஆண்டு 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை இயக்கினார் எச். வினோத். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு உருவானது. நிர்மல் குமார் என்பவர் இயக்கிய இந்தப் படத்திற்கு எச்.வினோத் கதை வசனம் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்திருக்கின்றனர். இந்நிலையில் 'சதுரங்க வேட்டை -2' படத்தை கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில பல காரணங்களால் இப்படம் கிடப்பில் இருக்கிறது.
பார்ட்டி
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, நாசர் எனப் பலரும் நடித்த படம் 'பார்ட்டி'. லாக்டௌன் காலகட்டத்திற்கு முன்னதாக ஃபிஜி தீவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. கடந்த 2020-ல் ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. முழுக்க தீவில் படப்பிடிப்பு நடத்தியதால், அங்குள்ள அரசு மானியம் கொடுப்பார்கள் என்பதால், முழுப்படபிடிப்பையும் அங்கே நடத்தினார்கள். ஆனால் லாக்டௌவுன் வந்துவிட்டதால், அந்நாட்டு அரசு மானியத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டது. இந்நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டால் மானியத் தொகை கிடைக்காது என்பதால் படத்தை வெளியிடாமல் இருந்தது. லாக்டவுன் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் படம் வெளியிடுவது தொடர்பாக படக்குழு இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை.
இடம் பொருள் ஏவல்
2014 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் ’ இடம் பொருள் ஏவல்’ படம் உருவானது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்திருந்தன. இப்போது வரை படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.
எங் மங் சங்
2018 ஆம் ஆண்டு பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கிய படம் 'எங் மங் சங்'. பிரபுதேவா 'தேவி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கேட்ட கதை இது. ஆர்.ஜே.பாலாஜி, 'கும்கி' அஸ்வின் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தக் கதையில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்ட்ராக நடித்திருக்கிறார். பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடித்திருக்கிறார். சில பொருளாதார சிக்கல்களால் இன்னமும் இப்படம் வெளிவராமல் இருக்கிறது.
இதேபோல அரவிந்த் சாமியின் 'வணங்காமுடி', அருண் விஜய்யின் 'வா டீல்', வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', விஜய் ஆண்டனியின் 'அக்னிச் சிறகுகள்' எனப் பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் இருகின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...