மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு
கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மண்டியா மாவட்டம், மத்தூரில் செப். 7ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தின்போது, பங்களே மனே பகுதியில் மசூதி அருகே ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதனால் மதக்கலவரம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 22 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கல்வீச்சு சம்பவத்தை கண்டித்து மத்தூரில் செப். 8ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 3 போலீஸார் உள்பட 20}க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மத்தூரில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தப் போராட்டத்துக்கு மஜதவும் ஆதரவு தெரிவித்தது.
மத்தூரில் செவ்வாய்க்கிழமை கடைகள், தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. இதனால் நகரமே வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பாலதந்தி கூறுகையில், "மத்தூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. அமைதி நிலவுகிறது. 144 தடை உத்தரவு புதன்கிழமை (செப்.10) காலை வரை அமலில் இருக்கும். கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் கூறுகையில், "மத்தூரில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்.செலுவராயசாமி தலைமையில் இரு தரப்பினருக்கு இடையே அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். யாராக இருந்தாலும், தவறு இழைத்திருந்தால் தப்பிக்க விடமாட்டோம். எந்தக் கருணையும் காட்டாமல் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.