குற்றங்களே நடக்காத கிராமம்! காவல்நிலையத்தை பார்த்ததே இல்லையாம்!!
``மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால்'' - திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு; பகிரங்க மிரட்டல்
பாலிவுட் நடிகை திஷா பதானி
பாலிவுட் நடிகை திஷா பதானி உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதிகாலையில் நடந்த இத்துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டிற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கூட்டத்தைச் சேர்ந்த வீரேந்திர சவான் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

ஏன் இந்த துப்பாக்கிச்சூடு?
இது தொடர்பாக வீரேந்திர சவான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
"நாங்கள்தான் திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அவர் நமது மரியாதைக்குரிய இந்து துறவிகளை (பிரேமானந்த் ஜி மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா ஜி மகராஜ்) அவமதித்துள்ளார்.
அவர் நமது சனாதன தர்மத்தை இழிவுபடுத்த முயன்றுள்ளார். நம் தெய்வங்களை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அடுத்த முறை அவரோ அல்லது வேறு யாரோ நம் மதத்தை அவமதித்தால் அவர்கள் வீட்டில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.
இது திஷா பதானிக்கு மட்டுமான எச்சரிக்கை கிடையாது. பாலிவுட்டில் இருப்பவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கும் தான்.
`எங்களது முதல் கடமை'
எதிர்காலத்தில் எங்களது மதத்தையும், துறவிகளையும் அவமதித்தால் கடும் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்.
எங்களது மதத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிலிருந்து பின்வாங்க மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை மதமும், சமுதாயமும் ஒன்றுதான்.
அதனைப் பாதுகாப்பதுதான் எங்களது முதல் கடமை'' என்று குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். திஷா பதானி கங்குவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார்.

இந்து மத சாமியார் அனிருத்தாச்சார்யா மகாராஜ் சமீபத்தில் லிவ் இன் உறவில் வாழும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பாலிவுட் நடிகை திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி சாமியார் அனிருத்தாச்சார்யாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
குஷ்பு பதானி
இது தொடர்பாக குஷ்பு பதானி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவியில், ''அவர் என் அருகில் இருந்திருந்தால், பெண்களுக்கு எதிராக அவர் பயன்படுத்திய வார்த்தைகளின் அர்த்தத்தை நான் அவருக்குப் புரிய வைத்திருப்பேன். அவர்கள் தேச விரோதிகள். நீங்கள் ஒருபோதும் அதனை ஆதரிக்கக்கூடாது''என்று குறிப்பிட்டு இருந்தார்.
அனிருத்தாச்சார்யாவின் இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து அனைத்து பெண்களையும் அவ்வாறு கூறவில்லை என்றும், சிலர் மட்டுமே அப்படி என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் குஷ்பு, சாமியார் அனிருத்தாச்சார்யா மட்டுமல்லாது சாமியார் பிரேமானந்த்ஜி குறித்தும் விமர்சித்ததாக செய்தி பரவியது.
இதற்கு குஷ்பு விளக்கம் அளித்திருந்தார். அவர் தான் அனிருத்தாச்சார்யா குறித்து மட்டுமே பேசியதாகவும், பிரேமானந்த்ஜி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.
அவர் தனது விளக்கத்தில்,''மக்கள் என் வார்த்தைகளைத் தவறாகவும், திரித்தும் பயன்படுத்துகின்றனர். அதோடு எனக்கு தொடர்பில்லாத ஒன்றில் என் பெயரையும் என் குடும்பப் பெயரை இழுப்பதை பார்ப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. துறவிகள் மற்றும் ஆன்மீக மரபுகளை மதிப்பது என் இதயத்தில் ஆழமாக வைத்திருக்கும் ஒன்று. ஆனால் பெண் வெறுப்பு எங்கிருந்து வந்தாலும் அதனை கண்டு அமைதியாக இருக்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.