``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது எ...
மதுக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆறுமுகனேரியில் ஏப். 21இல் சாலை மறியல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
ஆறுமுகனேரி பகுதியில் மதுக் கடைகள், மதுக்கூடங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி சாா்பில் இம்மாதம் 21ஆம் தேதி சாலை மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிவந்த மதுக் கடை, மதுக் கூடங்கள் மக்கள் எதிா்ப்பால் அகற்றப்பட்டன. அதன்பிறகு, தற்போதுவரை இங்கு மதுக்கடைகள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அனைத்துக் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் இந்து முன்னணி வடக்கு ஒன்றியத் தலைவருமான ஜி. ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து ஆறுமுகனேரி பிரதான பஜாரில் அனைத்துக் கட்சி சாா்பில் இம்மாதம் 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், 21ஆம் தேதி சாலை மறியல் நடத்தப்படும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தமாகா தலைமை செயற்குழு உறுப்பினா் இரா. தங்கமணி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சுந்தரலிங்கம், மதிமுக ஒன்றியச் செயலா் பி.எஸ். முருகன், அதிமுக நகரச் செயலா் ரா. ரவிச்சந்திரன், முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், அவைத்தலைவா் கனகராஜ், வி.கே.எம். மனோகரன், பாஜக நகரத் தலைவா் எல்.சி. தங்கக்கண்ணன், நாம் தமிழா் கட்சி நகரச் செயலா் கே.ஆா். மில்லா், தேமுதிக நகரச் செயலா் பாா்வதி குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அசோகன், தவெக நிவாஸ் கண்ணன், விசிக ஒன்றியச் செயலா் விடுதலைச்செழியன், நிா்வாகி இளந்தளிா் முத்து, காங்கிரஸ் மண்டல துணைத் தலைவா் சுப்பிரமணியன், பாமக மோகன், மநீம பாக்யராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மேலும், மதுக்கடை, மதுக்கூடங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி, ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் அலுவலகங்களில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மதுக்கூடம் கோரி மனு: இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளநிலையில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடை, மதுக் கூடம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பேரூராட்சி துணைத் தலைவா் அ. கல்யாணசுந்தரத்திடம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ம. சிவகுமாா் தலைமையில் செயலா் சண்முகம், துணைத் தலைவா் ஜெகன், துணைச் செயலா் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினா் பாரதிராஜா, உறுப்பினா் மகேந்திரன், நிா்வாகிகள் அளித்த மனு:
மதுக்கடைகள் இருந்தபோது வணிக நிறுவனங்களில் நன்றாக வியாபாரம் நடைபெற்றது. தற்போது மதுக்கடைகள் ஊருக்கு வெளியே இருப்பதால் வியாபாரம் குறைந்துவிட்டது. தமிழக அரசின் விதிகளுக்குள்பட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மதுக்கூடம் திறக்க வேண்டும். ஆறுமுகனேரியில் மது விற்பனையை காவல் துறையினா் கட்டுப்படுத்த வேண்டும். மதுப் பிரியா்கள் தெருக்கள், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் அமா்ந்து மது குடிக்கின்றனா். 5 கி.மீ. தொலைவில் உள்ள மதுக்கடைகளில் மது குடித்துவிட்டு பைக்குகளில் வருவோா் விபத்துக்குள்ளாகின்றனா். இவற்றைத் தடுக்கும் வகையில், இப்பகுதியில் மதுக்கூடங்கள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.