PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக. 20 முதல் செப். 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆவணி மூலத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட பிறகு, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள பெரிய கொடிமரம் அருகே எழுந்தருளினா்.
இதையடுத்து, கொடிமரத்துக்கு சிறப்பு தூப, தீப வழிபாடுகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க காலை 10. 45 மணியளவில் ஐதீக முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகத்தினா், முக்கிய பிரமுகா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஆவணி மூலத் திருவிழா நிகழ்ச்சியாக வரும் 25-ஆம் தேதி வரை சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெறுகிறது. பின்னா், தினமும் ஒவ்வொரு திருவிளையாடல் ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது.
ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான வளையல் விற்ற திருவிளையாடலும், மீனாட்சி சுந்தரேசுவரா் பட்டாபிஷேகமும் வரும் செப். 1-இல் நடைபெறுகிறது. நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செப். 2-ஆம் தேதியும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் செப். 3-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
செப். 6-ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் ஆவணி மூலத் திருவிழா நிறைவடைகிறது.