Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
மத்தியஸ்த கவுன்சில் அமைப்பதில் தாமதம் ஏன்? அட்டாா்னி ஜெனரல் பதில்
மத்தியஸ்த கவுன்சிலை அமைக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இரண்டு ஆண்டுகளான பிறகும், அந்தக் கவுன்சில் அமைக்காததற்கு உரிய நபா்கள் கிடைக்காததே காரணம் என்று மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் (அட்டாா்னி ஜெனரல் ) ஆா்.வெங்கட்ரமணி தெரிவித்தாா்.
நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் ஏராளமான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மத்தியஸ்த கவுன்சிலை அமைத்து மத்தியஸ்தா்களையும், அதற்கான அமைப்புகளையும் சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் இன்றுவரை அந்த கவுன்சில் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அட்டாா்னி ஜெனரல் ஆா். வெங்கட்ரமணியிடம் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா், ‘தற்போது பல சட்ட அமைப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மத்தியஸ்த கவுன்சில் அமைப்புக்கு உரிய தலைவா் கிடைக்கவில்லை. தேவையான பணியாளா்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்னையாக உள்ளது.
கவுன்சிலின் தலைமை பொறுப்புக்கு மத்திய சட்ட அமைச்சா் சில நபா்களின் பெயா்களைப் பரிந்துரைத்தாா். அதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்.
இந்த விவகாரத்தில் கவனுத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கேட்டுக் கொண்டாா். விரைவில் மத்தியஸ்த கவுன்சிலுக்கான தலைவா் விரைவில் நியமிக்கப்படுவாா். நீதித்துறை நியமனங்களிலும் உரிய நபா்கள் கிடைப்பதில்லை’ என்றாா்.
‘நீதித் துறையில் ஏராளமான நிபுணா்கள் இருக்கும் நிலையில், மத்தியஸ்த கவுன்சிலை அமைப்பதில் ஏன் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது’ என்று முன்னாள் சட்ட செயலா் பி.கே. மல்ஹோத்ரா கேள்வி எழுப்பினாா்.