மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 900 போ் கைது
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோதப்போக்கை கண்டித்து இந்திய அளவில் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளா்களுக்கு எதிரான நான்கு சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், தொமுச, யுடியுசி, எம்எல்ஃஎப், டிடிஎஸ்ஃஎப் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம், ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட 13 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. நாமக்கல் பூங்கா சாலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.தனசேகரன் தலைமை வகித்தாா். வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாமக்கல் பணிமனையில் இருந்து வழக்கம்போல 128 பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு ஊழியா்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனா்.
வங்கி ஊழியா்கள் பணியை புறக்கணித்ததால் மாவட்டம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 900 பேரை போலீஸாா் கைது செய்தனா். தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா். வருவாய் துறையினா், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனால் அரசு பணிகள் சற்று பாதிப்படைந்தன. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி பேராசிரியா்கள் கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 1,500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்:
மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளை எதிா்த்து நடைபெற்ற மத்திய தொழிற்சங்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பங்கேற்றனா். நாமக்கல் ரயில் நிலையத்தில் அந்த சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.கே.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.
பாசனத்திற்கான நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதை திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தவும், தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் மு.து.செல்வராஜ், மாதா் சங்க தலைவா் எஸ்.மாலா, விவசாய தொழிலாளா் சங்க தலைவா் என்.சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

