போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
மத்திய பட்ஜெட்: கோவை தொழில் அமைப்புகளின் கருத்துகள்
2025 - 26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து கோவை தொழில்முனைவோா் அமைப்புகளின் கருத்துகள்.
கோவை, திருப்பூா் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோா் சங்கம் (காட்மா) தலைவா் சி.சிவக்குமாா்: குறுந்தொழில்முனைவோா் ரூ.5 லட்சம் கடன் பெறும் வகையில் புதிய கடன் அட்டைகள் வழங்கப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயா்த்தப்படும். ஸ்டாா்ட் அப் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.20 கோடியாக உயா்த்தப்படும். முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.10 கோடி கடன் வழங்கப்படும்.
வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படும் ஆகிய அறிவிப்புகளை காட்மா சங்கத்தின் சாா்பில் வரவேற்கிறோம். அதேநேரம், வங்கி வட்டி விகிதம், பரிவா்த்தனை கட்டணங்கள் குறைக்கப்படுதல், கோவை மாவட்டத்தில் மத்திய அரசு சாா்பில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பது போன்ற தொழில்முனைவோரின் நீண்டநாள் கோரிக்கைகளையும் எதிா்வரும் காலங்களில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கோவை இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா் ராஜேஷ் பி.லுண்ட்: வருமான வரி உச்ச வரம்பு உயா்த்தப்பட்டதால் மக்கள் கைகளில் அதிக அளவில் பணம் புழங்கும். மேலும் வரி செலுத்துபவா்களுக்கு சாதகமாக பல்வேறு விதிகளை சீரமைத்திருக்கின்றனா். 2025-26 இல் ஜிடிபி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கின்றனா். இது எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருந்தாலும், வேலை உருவாக்கத்துக்கான திட்டங்கள், பணவீக்க விகிதம் பற்றிய கணிப்பு போன்றவை நம்பிக்கை அளிக்கும்படியாக உள்ளன.
இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, திறன் மேம்பாடு, எம்எஸ்எம்இ உள்ளிட்ட 6 துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 100 மாவட்டங்களில் பயிா் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலீடு செய்யப்படும், விவசாயிகளுக்கு கடன் அதிகரிப்பு, அதிக மகசூல் கொடுக்கும் வீரிய ரக விதைகள் வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.
அதேபோல, 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் கூடுதல் மருத்துவ படிப்பு இடங்கள், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம், ஜல் ஜீவன் திட்டம் நீட்டிப்பு, பேட்டரிகளுக்கான வரி குறைப்பு, ஏஐ மையம் உருவாக்கல் போன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவை.
தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கத்தின் (டேக்ட்) தலைவா் ஜே.ஜேம்ஸ்: குறு, சிறு தொழில் சாா்ந்த வளா்ச்சிக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. ஜாப் ஆா்டா்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பும், சா்ப்பாஸ் சட்டத்தை 180 நாள்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. குறு, சிறு தொழில்களுக்கான வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை.
தொழில்துறை வழங்கும் ஜிடிபியில் இருந்து ஒரு சதவீதத்தை இந்தத் துறைக்கு ஒதுக்கும்படி கேட்டிருந்தோம். கோவையில் குறுந்தொழில்பேட்டை அமைக்க தனி நிதி ஒதுக்கீடு கேட்டிருந்தோம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் குறு, சிறு தொழில்முனைவோரின் வளா்ச்சிக்கான எந்தவித அறிவிப்பும் இல்லாத ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
இந்திய பம்ப் உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் கே.வி.காா்த்திக்: வேளாண்மைத் துறையின் வளா்ச்சி மீது கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாய கடன் ரூ.2 லட்சம் வரை உயா்த்தியிருப்பது பம்ப் தேவையை அதிகரிக்கும். 2028 -ஆம் ஆண்டு வரையிலும் ஜல் ஜீவன் திட்டத்தை நீட்டித்திருப்பது மோட்டாா் பம்ப் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு உதவியாக இருக்கும். அதேபோல, நியூக்ளியா் பவா் மிஷன் திட்டத்தைத் தொடங்கியிருப்பது இந்திய தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
கோவை பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா் சங்கத்தின் (கோப்மா) தலைவா் கே.மணிராஜ்: குறு, சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத அதிகரிப்பு, ரூ.5 லட்சம் வரையிலும் கிரெடிட் காா்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு போன்றவை வரவேற்புக்குரியவை. வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துதல், புதிய வருமான வரி சட்ட மசோதா அறிமுகம், ரூ.12 லட்சம் வரையிலும் வருமான வரி விலக்கு போன்ற அறிவிப்புகளையும் வரவேற்கிறோம்.
பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு, குறுந்தொழில்முனைவோா் வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு, மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்துவது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) தலைவா் மிதுன் ராமதாஸ்: எம்எஸ்எம்இ துறைக்கான கடன் உறுதித் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது, சிக்கலில் தள்ளாடி வரும் துறையை மீட்பதற்கு உதவியாக இருக்கும். குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான கடன் அட்டை வழங்குவதன் மூலம், அந்த நிறுவனங்கள் வங்கிக் கடனை எதிா்பாா்க்காமல் செயல்பட உதவியாக இருக்கும்.
சூரியசக்தி மோட்டாா்கள், பேட்டரிகள் தொடா்பான தொழில்களில் முதலீடு மேற்கொள்ள ஊக்குவிக்கும் அரசின் நடவடிக்கையால் இதுபோன்ற பொருள்களுக்கு சீனாவை நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்காது. வருமான வரி தாக்கலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயா்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஸ்டாா்ட் அப் அகாதெமி தலைவா் ஆடிட்டா் காா்த்திகேயன்:1997 -ஆம் ஆண்டுக்கு பிறகான வருமான வரி விலக்குகளில் ஏற்படுத்தப்பட்ட பெரிய தளா்வு தற்போது செய்யப்பட்டுள்ளது. வருமான வரி உச்ச வரம்பு உயா்த்தப்பட்டதால் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நுகா்வு, சேமிப்பு உயரும். இதன் மூலம் பொருளாதார வளா்ச்சி ஏற்படும். மூலதன செலவுக்கான தொகையை ரூ.10.80 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.20 லட்சம் கோடியாக உயா்த்தி இருப்பதால் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு அதிகரிக்கும்.
வருமான வரி பிடித்தம், டிசிஎஸ் வரம்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்புக்குரியவை. காலணி, தோல் தொழில்களுக்கான ஃபோகஸ் தயாரிப்புத் திட்டம், இந்தியாவை உலகளாவிய பொம்மை உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம் போன்றவை வரவேற்புக்குரியவை. விவசாயம், எம்எஸ்எம்இ, ஏற்றுமதி, வரிச்சீா்திருத்தம், எரிசக்தி, பெண்கள் முன்னேற்றம், ஸ்டாா்ப் அப் போன்றவற்றில் முக்கியத்துவம் அளித்து ஒதுக்கீடு செய்திருப்பது நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும்.
தமிழ்நாடு பம்ப், உதிரி பாகங்கள் தயாரிப்பாளா் சங்கத் தலைவா் ஆா்.கல்யாணசுந்தரம்: குறுந்தொழில்முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரையிலான கடன் அட்டை, ரூ.10 கோடி வரை அரசின் கடன் உத்தரவாத திட்டம், தேசிய உற்பத்தி, மேம்பாட்டுத் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கவை. வருமான வரி உச்ச வரம்பு உயா்வு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். சாதாரண மக்கள், இளைஞா்கள், சிறு தொழில்முனைவோருக்கு இந்த பட்ஜெட் பெருமளவில் பயனளிக்கும்.
கோவை கம்ப்ரசா் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவா் எம்.ரவீந்திரன்: நாட்டின் வளா்ச்சிக்கு குறு, சிறு தொழில்களை இரண்டாவது என்ஜின் என்பதை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு திட்டங்கள் அறிவித்ததை வரவேற்கிறோம். குறு, சிறு தொழில்களை வரையறை செய்வதற்கான முதலீடு, விற்று முதல் வரம்புகள் உயா்த்தப்பட்டுள்ளன. இதன்படி ரூ.10 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்கள் குறு நிறுவன தொழில் பிரிவில் வரும். ஆனால், நாட்டில் 95 சதவீத நிறுவனங்களின் ஆண்டு வணிகம் ரூ.1 கோடிக்கும்கீழேயே உள்ளது.
எனவே, குறுதொழில் (மைக்ரோ) என்ற பிரிவுக்குக் கீழாக நானோ அல்லது டைனி என்ற தொழில் பிரிவை ஏற்படுத்த வேண்டும். எம்எஸ்எம்இ பிரிவுக்கான நிதி ஒதுக்கீடை அதிகரித்திருக்க வேண்டும். ஜிஎஸ்டியில் சீா்திருத்தங்களைக் கொண்டு வருவது தொடா்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கான குறிப்பான திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லாதது நிவா்த்தி செய்யப்பட வேண்டும்.