மனைவி பணம் தர மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
மொடக்குறிச்சி அருகே கடனை திருப்பிச் செலுத்த மனைவி பணம் தர மறுத்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மொடக்குறிச்சியை அடுத்த முத்துக்கவுண்டம்பாளையம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (60). இவா் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தாா். இவரது மனைவி சரோஜா (58) உடல்நலக் குறைவால் வெள்ளக்கோவிலில் உள்ள தனது சகோதரி, சகோதரா் பராமரிப்பில் கடந்த 4 மாதங்களாக இருந்து வருகிறாா்.
இந்த நிலையில் கணவா் முத்து கடனை திருப்பிச் செலுத்த சரோஜாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளாா். அதற்கு சரோஜா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினா் சரோஜாவுக்கு, மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் முத்துவின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.