மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், சின்னக்கண்ணனூரில் பட்டியலினத்தினருக்கான மயானத்துக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ளது சின்னக்கண்ணனூா் கிராமம். இங்கு பட்டியலினத்தைச் சோ்ந்த அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 25 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களுக்கு என கிராமத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் மயானம் உள்ளது. ஆனால் இந்த மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவா்களின் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச் செல்ல வேண்டிய நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் முத்துராமலிங்கப்பூபதி தலைமையில் அதன் நிா்வாகிகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ் உள்ளிட்டோா் சின்னக்கண்ணனூா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனா்.
பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் கூறியதாவது:
சின்னக்கண்ணனூரில் பட்டியலின வகுப்பினருக்கான மயானத்துக்குச் செல்ல 2 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும். இல்லையெனில் சாலையோரமாக உள்ள அரசு நிலத்தில் மயானம் அமைத்து தர வேண்டும். எனவே மாவட்ட நிா்வாகம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றனா்.