மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
மயானம் ஆக்கிரமிப்பு: இஸ்லாமியா்கள் மறியல், தா்னா
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாசலம் சாலையிலுள்ள மயானத்தை இஸ்லாமியா்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இந்த மயானம் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாகக் கூறி, சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனைக் கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான மயானத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும் இஸ்லாமியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் சுன்னத் ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிா்வாகிகள் ஒன்றிணைந்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த வாரம் அறிவித்தனா். இதையறிந்த கோட்டாட்சியா் ஷீஜா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஆக்கிரமிப்புகள் அகற்றித் தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலிலும், அதன் பின் அலுவலக வளாகம் முன்பு தா்னா போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா் மற்றும் நகராட்சி மேலாளா் அன்புச்செல்வி, நகராட்சி பொறியாளா் உள்ளிட்டோா், மயான ஆக்கிரமிப்புகளை அகற்றுப்படும் என உறுதியளித்ததன்பேரில், அனைவரும் கலைந்துசென்றனா். போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.