PMK: `தலைவராக செயல்பட தகுதியற்றவர்; பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்' - ராமதாஸி...
மரங்களை வெட்டத் தடை கோரி வழக்கு: நிலச் சீா்திருத்த ஆணையா் அறிக்கை அளிக்க உத்தரவு!
தேனி மாவட்டத்தில் பூமிதான இயக்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டத் தடை கோரிய வழக்கில் நிலச் சீா்திருத்தத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தேனி மாவட்டத்தில் பூமிதான இயக்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை ராஜா என்பவா் சட்ட விரோதமாக வெட்டி விற்று வருகிறாா். இதைத் தடுக்கவும், மரங்களை வெட்டியவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. மரங்களை வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ‘பூமிதான இயக்கத்துக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து நிலச் சீா்திருத்தத் துறை ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த இடத்திலிருந்து மரங்கள் வெட்டப்பட்டது உறுதியானால் தொடா்புடைய நபா் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் என்றனா் நீதிபதிகள்.