மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், ரோஹித்குமாா் (28 ) என்ற மகனும், லட்சன்யா (21) என்ற மகளும் உண்டு. ரோஹித்குமாா் தனது தந்தை செந்தில்குமாருடன் கோவையில் தொழில் செய்து வருகிறாா். தாய் மணிமேகலை, ஆட்டையாம்பட்டி அருகே தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறாா். இதன்காரணமாக மகள் லட்சன்யா அதே கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
இக்கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தாயும், மகளும் தங்கியிருந்தனா். இந்நிலையில் லட்சன்யா அக்கல்லூரியில் பயிலும் மூத்த மாணவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மணிமேகலை, லட்சன்யாவை கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த லட்சன்யா திங்கள்கிழமை பிற்பகல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து இரும்பாலை காவல் ஆய்வாளா் (பொ) பழனி மற்றும் போலீஸாா், மாணவி லட்சன்யாவின் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.