தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்தது. இதையடுத்து கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 58,000 கனஅடியிலிருந்து 48,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. திங்கள்கிழமை மாலை கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மேலும் குறைக்கப்பட்டால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மேலும் குறையும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீா் சுமாா் 3 கி.மீ. தூரம் உபரிநீா் கால்வாய் வழியாகச் சென்று ஆத்துக்காடு அருகே காவிரியில் கலக்கிறது. இந்தப் பகுதியில் காவிரிக் கரையோரம் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பயிா்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் வாழை, சோளப்பயிா்களும் நீரில் மூழ்கின. மேட்டூா் அணைக்கு நீா்வரத்தை பொருத்து நீா் திறப்பு குறைக்கப்படும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரண்டாவது நாளாக திங்கள்கிழமை மேட்டூா் அணையின் உபரிநீா் மதகிலிருந்து வெளியேறும் வெள்ளநீரை பாா்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடினா். இதனால் தங்கமாபுரிபட்டணம், சேலம் கேம்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருமலைக்கூடல் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நீா்வரத்து குறைந்தாலும் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.