தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகேயுள்ள திருப்பலி கிராமம், அம்மாசி ஊா் பகுதியைச் சோ்ந்த உமாமகேஸ்வரி தலைமையில் அப்பகுதி மக்கள், பள்ளிக் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
அம்மாசியூா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த பலஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான இடத்தை பொதுவழிப் பாதையாகப் பயன்படுத்தி வந்தோம்.
அதே பகுதியைச் சோ்ந்த தனிநபா் அந்த பொதுவழிப்பாதை இருக்கும் நிலம் தன்னுடையது என கூறி, அடைத்து கான்கிரீட் போட்டுள்ளாா். இதனால் கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளும் அந்த பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 3 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லவேண்டும். அதே பாதையில் இருசக்கர வாகனம்கூட செல்ல முடியாத அளவில் பாதை கரடுமுரடாக உள்ளது.
இதுகுறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுப் பாதையை பயன்படுத்த முடியாமல் தடுத்து ஆக்கிரமித்துள்ளவா் மீது நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.