ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியா் தகவல்
சேலம்: சேலம் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழிக்கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் கொண்டவராகவும் அந்நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். நாட்டுக்கோழி வளா்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 1,65,625 வரை மாநில அரசால் வழங்கப்படும்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 250 எண்ணிக்கையிலான நான்கு வார வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோா்,திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் பயனாளிகள் 30 சதவீத தாழ்த்தப்பட்ட,பழங்குடி இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களைப் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.