ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வருவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேவூா், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் அருகே உள்ள புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஜூன் 26ஆம் தேதி ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்ததது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள், விவசாய மின்மோட்டாா்களுக்கு மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவூா் மின்வாரிய ஊழியா்கள் உடைந்த மின்கம்பத்தை மாற்றுவதற்காக புதிய மின்கம்பத்தை நிறுத்தியுள்ளனா். இதற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நான்கு நாள்களாகியும் மின்சாரம் தடைபட்டிருந்ததால் அப்பகுதி விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.
இதையடுத்து மின்தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள், பொதுமக்கள் புளியம்பட்டி ஆலமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வபவா்கள் பாதிப்படைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேவூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.