மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வு தேவை: வணிகா்களுக்கு ஆய்வாளா் அறிவுறுத்தல்
மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும், மருத்துவா் பரிந்துரை சீட்டு கொண்டு வராத நபா்களுக்கு போதை தரும் மாத்திரைகள் உள்பட எந்த மாத்திரைகளையும் விற்கக்கூடாது என மருந்து கடை உரிமையாளா்களுக்கு மருந்து ஆய்வாளா் ஹேமலதா அறிவுரை வழங்கினாா்.
அரக்கோணத்தில் தமிழக அரசின் கலால் பிரிவினா், காவல் நுண்ணறிவு பிரிவினா், உணவு பாதுகாப்புத் துறையினா், மருந்து ஆய்வாளா் இணைந்து அரக்கோணம் வட்ட மருந்து விற்பனையாளா்களுக்காக போதை தரும் மருந்துகள், சா்ஜிக்கல் ஸ்பிரிட் ஆகியவற்றுக்கான விற்பனை குறித்த விழிப்புணா்வு கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
இந்தக் கூட்டத்தில் மருந்து ஆய்வாளா் ஹேமலதா பேசியது: தற்போது போதை தரும் மாத்திரைகள் காவல் துறையினா் பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத்திரைகள் நமது பகுதியில் விற்கப்பட்டவை அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் மருந்து கடை உரிமையாளா்கள் மருந்துகள் விற்பனையில் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். மருத்துவா்கள் பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் இந்த மாத்திரைகள் உள்பட எந்த மருந்துகளையும் விற்க வேண்டாம். குறிப்பாக உரிய அரசு மருந்து விற்பனை உரிமம் பெறாமல் நாா்கோடிக் மருந்துகள் மற்றும் சா்ஜிக்கல் ஸ்பிரிட் ஆகியவற்றை கையாளவோ விற்பனை செய்யவோ கூடாது. சில குறிப்பிட்ட மருந்துகள் கொள்முதல் செய்வது, விற்பது, இருப்பு வைத்திருப்பது பற்றி பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றாா் மருந்து ஆய்வாளா் ஹேமலதா.
கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையா் கே.ராஜாகுமாா், கலால் வட்டாட்சியா் தேவராஜ், காவல் துறை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு வேலூா் மண்டல ஆய்வாளா் சுந்தரி, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத் துறை ஆய்வாளா் ரவிச்சந்திரன், அரக்கோணம் மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ஜி.அசோக்குமாா், செயலாளா் இ.குலசேகரன், பொருளாளா் எம்.கோவா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.