மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்
மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் 'குரோக் 4' என்ற புதிய பதிப்பை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்சூ என்ற பயனர், ஒரு மலையேற்றத்தின்போது குரோக் 4 கேமராவில் அங்குள்ள தாவரங்களைக் காட்டி அதன் பெயரைக் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்கு குரோக்கும் சரியாக பதிலளித்துள்ளது. சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் பதில் அளித்துள்ளது.
பூக்கள் குறித்தும் கேள்வி கேட்க அதுபற்றியும் கூறியதுடன் 'நல்ல புகைப்படம்; என்றும் பாராட்டியுள்ளது.
ஓரளவு சரியாகச் சொல்வதாகவும் சிலவற்றை யூகங்களின் அடிப்படையில் சொல்வதாகவும் கூறிய அவர், குரோக் 4-யை 'பாக்கெட் பிஹெச்டி' என்று வர்ணித்தார். மேலும் தான் கேள்வி கேட்டதையும் குரோக் பதில் சொன்னதையும் விடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
You can just point your camera at anything and @Grok will tell what it is.
— Elon Musk (@elonmusk) July 28, 2025
It could even read the writing on my doctor’s prescription note! https://t.co/mckEII2cFj
இந்த விடியோவைப் பகிர்ந்து எலான் மஸ்க்,
"உங்கள் கேமராவை எதை நோக்கியாவது காட்டும்போது குரோக் அதுபற்றிய தகவல்களை வழங்கும்.
என்னுடைய மருந்துச் சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக் கூடப் படிக்கக்கூடும்!" என்று பதிவிட்டுள்ளார்.
கூகுள் லென்ஸிலும் ஏதேனும் புகைப்படத்தையோ அல்லது எதன்மீது கேமராவை காட்டுகிறோமா அது பற்றி தகவல் கிடைக்கும். கூகுள் லென்ஸுக்குப் போட்டியாக தற்போது குரோக்கும் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.