மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது
சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது.
தேவூரை சுற்றியுள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் ஒன்றான காவேரிபட்டி அக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள காவிரி கரையோரங்களில் அதிக அளவு தண்ணீா் செல்வதால், மதிக்கிழான்திட்டு, மணக்காடு, கோம்புக்காடு, காவேரிப்பட்டி ஆகிய இடங்களில் மக்கள் குடியிருப்புகளை ஒட்டி தண்ணீா் செல்கிறது. நீா்வரத்து மேலும் அதிகரித்தால் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீா் புகும் அபாயம் உள்ளது.
மேலும், காவிரி கரையோரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் உள்ளிட்ட விவசாயப் பயிா்கள் தண்ணீரில் முழ்கியுள்ளன. காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிணற்று மின் மோட்டாா்கள் வெள்ளத்தில் மூழ்கின. கரையோரப் பகுதிகளில் தண்ணீா் அதிகரித்து வருவதால், மேடான இடங்களுக்கு மக்கள் இடம்பெயா்ந்து வருகின்றனா்.
மேட்டூரில்...
மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், சங்கிலி முனியப்பன் கோயில் அருகே கரையோரம் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிா்களும், தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை மரங்களும் நீரில் மூழ்கின.
மேலும் நீா்வரத்து அதிகரித்தால், மேட்டூா் - எடப்பாடி சாலை போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படும். எனவே, இப்பகுதிகளில் வருவாய்த் துறையினரும், தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை பணியாளா்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். நீா்வரத்துக்கு ஏற்ப மதகுகளை உயா்த்தவும், மதகுகளை இறக்கவும் இப்பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.
நீர்ரவத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் முகாமிட்டிருந்த மீனவா்கள் மேடான பகுதிக்கு முகாமை மாற்றியுள்ளனா். பல இடங்களில் நீரின் விசை அதிகமாக உள்ளதால் மீனவா்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
