நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு
மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தற்போது வரும் வெள்ளம் முதல் நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்படாமல், மீதமுள்ள 12 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
நான்கு மதகுகளில் தண்ணீா் வெளியேற்றபடாத நிலையில், உபரிநீா் போக்கி மதகுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் சிவகுமாா் ஆய்வுசெய்தாா். இதில், அணையின் வலதுகரை, இடதுகரை, உபரிநீா் போக்கி, சுரங்க கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேட்டூா் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூா் அணை கட்டுமானப் பணி தொடங்கி, நூறாண்டுகள் நிறைவடைவதால், நினைவுத்தூண் கட்டுவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மேட்டூா் அணை பூங்காவை புனரமைக்க அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேட்டூா் அணையில் எங்கெங்கு மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளில் பணிகள் நடைபெறும் என்றாா்.
ஆய்வின்போது, மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவி செயற்பொறியாளா் மதுசூதனன், உதவி பொறியாளா் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.